தில்லை தென் கோபுரத்தை எடுப்பித்த கோப்பெருஞ்சிங்கன்!

Kopperunchinga, Thillai Natarajar Temple, Chidambaram

சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்ட மன்னனான மணவாளப் பெருமான், என்று அழைக்கப்படும் காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் தில்லை ஆடவல்லானிடம் பெரும் பற்றுடையவன்.

இவனுடைய 5ஆண்டில் தோன்றிய ஆற்றூர்ச் சாசனம் தில்லையம்பதியின் தெற்குக் கோபுரத்தைக் கட்டுவதற்கு இவன் செய்த தானத்தைக் குறிக்கிறது. இக்கோபுரம் இவனது பெயரால் “சொக்கச்சீயன் திருநிலை எழுகோபுரம்” என்று வழங்கப்பட்டது. இது ஏழு நிலைகளையுடைய கோபுரம் ஆகும். இத் திருப்பணிக்கு உடலாக ஆற்றூர் ஆன இராசராச நல்லூரில் நிலம் முன்னூற்றொன்றே முக்காலும், கொல்லைப் புன்செயும் சில்காசு ஆயங்களும் தேவதான இறையிலியாக இம் மன்னன் தனது ஐந்தாவது ஆண்டு ஆடி மாதம் முதல் (கி. பி. 1248) இடப்பட்டன என்று கூறுகிறது. கல்வெட்டு வாக்கியப்படி, முன்னமே அங்கிருந்த கோபுரத்தை எழுநிலையாக உயர்த்தித் திருப்பணி செய்யப் பெற்றது இக்கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் என்பது உணரலாகிறது.

கோப்பெருஞ்சிங்கனின் விருது பெயர்களாக “கண்ட பண்டாரலுண்டக, க்ஷிரபகாத க்ஷண நாயக, காவேரிகாமுக, பெண்ணாநதி நாத, கட்கமல்லன், பரத மல்லன், சாகித்யரத்னாகரன், மல்லாபுரிவல்லபன், காஞ்சிபுரிகாந்தன்” கல்வெட்டின் மூலமாக அறியமுடிகிறது.

முதலாம் மற்றும் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன்களின் பொதுவான சிறப்புப் பெயர்களாக “பல்லவர் பெருமான், சகலபுவன சக்கரவர்த்தி, கூடல் அவனியாளப் பிறந்தான், காவலர் தம்பிரான், பரதம் வல்ல பெருமாள், மல்லைக் காவலன், நிசங்க மல்லன், அழகிய சீயன், அவனி நாராயணன், செந்தமிழ் வாழப் பிறந்த மிண்டன் சீயன், நிருபதுங்கன், சொக்கச்சீயன், காடவன், தொண்டை மன்னவன், மல்லை வேந்தன், சீயன், சாடும்பெருமாள், திரிபுவனத்திராசாக்கள் தம்பிரான்” இவைகள் கல்வெட்டின் மூலமாக நாம் அறியலாம்.

காடவராய மன்னர்களில் புகழ்பெற்றவர் இந்த கோப்பெருஞ்சிங்கன். இவன் சோழ இளவரசியை தில்லையில் வைத்து மணம் புரிந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், கி.பி. 1216 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த தனது மைத்துனனான/மாமனான சோழ அரசன் மூன்றாம் ராஜராஜ சோழனை கைது செய்து சேந்தமங்கலத்தில் ஒரு ரகசிய இடத்தில சிறை வைத்தார். இதன் நிகழ்வால் கோப்பெருஞ்சிங்கன் ஒரு பெரும் இன்னலை சந்தித்தான் என்று சொன்னால் மிகையாகாது.

அன்னமங்கலத்தில் கைதான சோழ சாம்ராஜ்யம்

காடவராயன் கோப்பெருஞ்சிங்கனைப் பற்றி இருவேறு கருத்துகள் வரலாற்று வல்லுனர்களிடம் உலவுகிறது. சிலர் கோப்பெருஞ்சிங்கன் இருவரென்றும் அவர்கள் முறையே முதலாம் கோப்பெருஞ்சிங்கன், இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் என்கிறார்கள். இதனை மறுத்து கோப்பெருஞ்சிங்கன் ஒருவனே என்று “கோப்பெருஞ்சிங்கன்” என்ற வரலாற்று நூலை எழுதிய எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் கூறுகின்றார்.

காடவராயன் கோப்பெருஞ்சிங்கன், சேந்தமங்கலத்தில் வாணிலைக் கண்டேசுவரம் என்ற சிவன் கோயில் ஒன்றைக் கட்டினார். இக்கோயிலிலுள்ள சிவன் ஆபத்தசகாயேசுவரர் என அழைக்கப்படுகிறார். அதோடு மட்டுமில்லாமல் இக்கோயில் குளம் அருகிலுள்ள கருங்கல் குதிரை சிலைகள் நிறுவியுள்ளார். இதன் சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு இடத்தில் தட்டும் போதும் வெவ்வேறு ஒலியை எழுப்பும் திறன் படைத்தமை இந்த இசைக் குதிரைகள்.

Abathsahayeswarar, Abathsahayeswarar Temple, Senthamangalam, Kallakurichi District
Abathsahayeswarar, Abathsahayeswarar Temple, Senthamangalam, Kallakurichi District

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியில் கச்சிராயர் (படையாட்சியர்) என்ற பட்டத்தோடு காடவன் வழி வந்தோர் இன்றளவும் வாழ்ந்து வருகின்றனர் என்ற செய்தி இணையம் வழியாக கிடைக்கின்றது.

Kopperunchinga I, Kopperunchinga II, Thillai Natarajar Temple, Chidambaram
Kopperunchinga I, Kopperunchinga II, Thillai Natarajar Temple, Chidambaram

தில்லை நடராஜர் கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்.
Kopperunchinga, Thillai Nataraja Temple, Chidambaram, Cuddalore District, Tamil Nadu.


Thanks for supporting us!
To contribute:
PayPal us – paypal.me/sureshpriyan
Google Pay us – priyan.suresh@okicici

Chithiram Pesuthada